போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்!
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 19ஆம் தேதியன்று சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கலும், போக்குவரத்து முடங்கும் அபாயமும் ஏற்பட்டது.
எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு கடந்த 5ஆம் தேதியும், 8ஆம் தேதியும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, ஜனவரி 9ஆம் தேதி (நேற்று) முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம், தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனிடையே, அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என கருத்து தெரிவித்தது. “போராடுவதற்கு உரிமை இல்லை என சொல்லவில்லை; பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான் எனவும் கருத்து தெரிவித்தது.
பஞ்சமி நிலங்கள் மீட்பு: பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் - அண்ணாமலை திட்டவட்டம்!
இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், அதற்கு சம்மதம் தெரிவித்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
மேலும், நாளை முதல் பணிக்கு திரும்புவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளன.