தமிழகத்தில் எந்த வடிவத்தில் கொரோனா வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் எந்த வடிவத்தில் கொரோனா வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் ஒமைக்ரானை விட அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. XE என்பது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அது XE வகை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ், XE வகை வைரஸ் என எந்த வடிவத்தில் கொரோனா வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதை அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், XE வைரஸ் ஒமைக்ரானை விட 10 சதவீதம் வேகமாக பரவும் என்று கூறினாலும், இங்கிலாந்தில் 627 பேர் அளவில் பாதிப்பு இருப்பது ஆறுதல் தரும் செய்தி என்று தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட 2096 படுக்கை வசதிகளை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது வரை 10 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், முதல் தவணை 92 சதவிகிதம் பேருக்கும், இரண்டாவது தவணை 77 சதவிகிதம் பேருக்கும் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.