பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு? அடிக்கப்போகும் ட்ரிபிள் ஜாக்பாட் - முதல்வர் ஸ்டாலின் எடுக்கு முடிவு!
பொங்கல் பரிசுத் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 15ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. பல இடங்களில் பொருள்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் நடப்பாண்டில் (2023ஆம் ஆண்டு) பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது
கடந்த ஆண்டுகளில் திமுக அரசு பொங்கல் பரிசு வழங்கியபோது கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், வெல்லம் தரமற்றதாக இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பின. தற்போது பொங்கல் பரிசு கொள்முதல் நடைமுறை இன்னும் தொடங்கப்படாத நிலையில், 1000 ரூபாய் ரொக்கத்துடன் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாகவும் பணம் வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது, ரூ.2000 வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதேபோல், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 14 அல்லது 15 தேதிக்குள் விடுவிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை 15ஆம் தேதி வருவதால் அதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக 14ஆம் தேதிக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், ரூ.3000 கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படவில்லை. எனவே, மகளிர் உரிமைத் தொகை பெறாத குடும்பங்களுக்கு ரூ.2000 ரொக்கமும், அத்தொகையை பெறும் குடும்பங்களுக்கு ரூ.3000 ரொக்கமும் கிடைக்கும் என எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
நிர்மலா சீதாராமன் சொல்வது பச்சை பொய்: ஆர்.எஸ் பாரதி பதிலடி!
அதேசமயம், மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் கனமழை என தமிழகம் இரண்டு பேரிடர்களை எதிர்கொண்டுள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்திட தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லை. மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்தாலும், மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய தொகையை மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது. தேசிய பேரிடர் நிதியில் இருந்து இதுவரை எந்த தொகையும் விடுவிக்கப்படவில்லை. மாநில அரசிடம் இருக்கும் நிதி போதுமானதாக இல்லை என்பதால், தேசிய பேரிடர் நிதியை கூடுதலாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
எனவே, நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ஆகியவை வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படவில்லை. இது ஏற்கனவே விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதேபோல், மக்களவைத் தேர்தலும் நெருங்கிறது. ஒருவேளை தமிழக அரசு பொங்கல் தொகுப்பு, ரொக்கம் ஆகியவற்றை வழங்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும், மக்களவை தேர்தலில் பொதுமக்களிடம் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தி விடும் என்பதால் பொங்கல் பரிசு தொகையை வழங்கவே தமிழக அரசு முடிவு செய்யும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதுகுறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.