முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸுக்கு இலங்கை செல்ல பாஸ்போர்ட்: தமிழக அரசு தகவல்!

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

TN Govt informs madras hc that sri lankan passport had been given to murugan jayakumar robert payes  smp

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து 2022ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

முதலில் பேரறிவாளானும், பின்னர் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். நளினியின் கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்தியர்கள் என்பதால், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் அவர்களது வீடுகளுக்குச் சென்றனர். இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், தாங்கள் விரும்பும் நாட்டிற்குத் தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என இவர்கள் கோரி வந்ததற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட சாந்தன் உயிரிழந்தார்.

மக்களவைத் தேர்தல் 2024: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வேட்புமனுத் தாக்கல்!

இதையடுத்து மீதமுள்ள மூவருக்கும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்த நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனது கணவருக்கு விசா, பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க வகை செய்யும் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. அவர்கள் மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் 3 பேரும் ஒரு வாரத்துக்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை அரசால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டை தேவையில்லை என கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios