துணைவேந்தர் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக்குழுவை தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யு.ஜி.சி. பிரதிநிதியை (பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி) தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள்படி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க யு.ஜி.சி. விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சமீபத்திய சம்பவமாக இந்த விவகாரம் அமைந்துள்ளது. இதனிடையே, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் அண்மையில் ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த தேர்வுக் குழுவின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், யு.ஜி.சி. பிரதிநிதியை சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனியாக ஒரு குழு அமைத்து அறிவித்தார். இந்த குழுவை ஏற்கபோவதில்லை என தமிழக அரசு அறிவித்தது.
சென்னை அருகே தீம் பார்க்: தமிழக அரசு மாஸ் ப்ளான்!
அதன் தொடர்ச்சியாக, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய யு.ஜி.சி. பிரதிநிதியை நீக்கி தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்து அரசிதழில் வெளியிட்டது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தமிழக அரசு தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக்குழுவை தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழை உடனடியாக திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.