செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சுட்டிக்காட்டி, அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால், உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. சட்ட ரீதியாக இதனை நாங்கள் சந்திப்போம் என்றார். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மற்றும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி., ஆ.ராசா, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலர் கலடந்து கொண்டனர்.
ஆளுநரை திரும்பப் பெற திமுக போராட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன்படி, அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டுள்ளதாகவும், அதுவரை செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த நடவடிக்கை தற்காலிகமானதே என கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் செந்தில் பாலாஜியை ஆளுநர் மீண்டும் நீக்கலாம் என தெரிகிறது. அதேசமயம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றம் சென்றால் ஆளுநருக்கு பின்னடைவு ஏற்படும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அமைச்சரை நீக்கும் அதிகாரமும், இணைக்கும் அதிகாரமும் முதல்வருக்கு மட்டுமே உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த பின்னணியில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
