காவிரி பிரச்சனையில் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது என்றும் வானளாவிய அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

காவிரியிலிருந்து ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் தரக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று 5ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. 

தமிழகஅரசின் சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி வாதிட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, கர்நாடக அரசு நடுவர்மன்றத் தீர்ப்பை மதித்து நடக்கவில்லை என வாதிட்டார். 

மேலும், கர்நாடக மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் டெல்டா சாகுபடி பரப்பளவு அதிகம் என்றும், மக்கள் தொகை எண்ணிக்கையும் கர்நாடகாவை விட அதிகம் என்றும் சுட்டிக்காட்டி, அதற்கேற்ப காவேரியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு, வழக்கின் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் நாப்தே ஆஜராகி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர் மிகக்கடுமையாக  வாதிட்டார். இதுவரை மென்னையான போக்குடம் வாதிட்ட சேகர் நாப்தே இன்று தனது வாதத்தில் கடுமை காட்டினார்.

அப்போது காவிரி பிரச்சனையில் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது என்றும் வானளாவிய அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் கர்நாடக அரசு தங்கள் மாநிலத்தில் அணை கட்டும்போது தமிழக அரசிடம் தெரிவிப்பதில்லை என தெரிவித்தார்.