அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்: விரைவில் குட் நியூஸ்!
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விரிவுபடுத்தப்பட்டது.
முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ், சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் தற்போது பயனடைந்து வந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
அதேசமயம், நாட்டிற்கே முன்னோடி திட்டமாக விளங்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். “அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக பரிசீலிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து சாதகமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கில், “அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை கொண்டு செல்வதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என தமிழக அரசு பதிலளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.