கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது - ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என ஆளுநர் ரவி சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்
தமிழக ஆளுநர் ரவி, ஆளும் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, தமிழக அரசு தயாரித்து தரும் உரையை சட்டமன்றத்தில் வாசிக்காமல் புறக்கணிப்பது என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
அதுதவுட, திமுகவையும் அதன் கொள்கைகளையும் நேரடியாக கடுமையாக சாடி வருகிறார். திராவிடம் கிடையாது என பேசுவது, தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என கூறுவது, சனாதன தர்மத்துக்கு ஆதரவாக பேசுவது என சித்தாந்த ரீதியாகவும் எதிர்ப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில், ஜி.யு.போப், கால்டுவெல் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர்கள் எனவும், திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது எனவும் ஆளுநர் ரவி சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்.
அய்யா வைகுண்டரின் 192ஆவது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “அய்யா வைகுண்டர் நாரயணின் அவதாரம். வைகுண்டர் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணி பார்க்க வேண்டும். சனாதன தர்மத்திற்கு ஊறு ஏற்படும் போது கடவுள் நாரயணன் பல அவதாரமெடுக்கிறார். அப்படியான அவதாரமே வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்.” என்றார்.
ஐரோப்பிவிற்குள் நுழைவதற்கு முன்பே இந்தியாவிற்குள் கிறிஸ்தவம் வந்து விட்டதாக கூறிய அவர், வெளியில் இருந்து வந்த சிலர், அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அழித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட இலக்கு மதமாற்றம் செய்வதே என குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதம்: மூடிஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!
மேலும், “பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது. மக்கள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். இந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவை அடிமைப்படுத்த சவாலாக இருந்தது. இந்தியாவை அடிமையாக்க சனாதன தர்மத்தை அழிக்க பிரிட்டிஷ் முடிவெடுத்தது. இந்தியாவை ஆள்வதற்கு கிறிஸ்தவ மதமாற்றத்தை கொள்கையை பிரிட்டிஷ் அரசு கையில் எடுத்தது.” எனவும் ஆளுநர் ரவி குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் 1813ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் மக்களை கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். திராவிட மொழிகள் குறித்து எழுதிய கால்டுவெல் புத்தகம் போலியானது என சாடினார். இன்று பாரதம் விழிப்படைந்து பொருளாதார, கலாச்சாரம் வழிகளில் முன்னேறி வருவதாகவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.