அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை புகார்!

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச புகார் விவகாரத்தில் அத்துறை மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது

TN DVAC complaint against enforcement directorate smp

திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அங்கித் திவாரி என்பவர், மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசி, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி அரசு மருத்துவர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார். அதன்பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத் தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால், சந்தேகமடைந்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள், இரண்டாவது தவணையாக ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அங்கித் திவாரியை கைது செய்தனர். மேலும், அவர் தொடர்புடைய இடங்கள், அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது குறித்து புகார் தெரிவித்து தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வழக்குக்கு தொடர்பில்லாத மிக ரகசியமான ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

நகைக்கடைகளில் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா? மத்திய அரசு பதில்!

இந்த நிலையில், மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“வழக்கு தொடர்பாக அங்கித் திவாரி அறையில் மட்டுமே சோதனையிடப்பட்டது. எங்களை பணி செய்யவிடாமல் தடுத்து, இடையூறு செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.” என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios