Pudhumai pen scheme பெண் கல்வி வளர்ச்சியில் புதுமைப் பெண் திட்டம்: திமுக அரசின் சாதனை!

திமுக அரசு கொண்டு வந்த புதுமை பெண் திட்டம் பெண் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது

TN DMK Govt pudhumai pen scheme helped a lot in women education smp

திமுக அரசு ஆட்சியமைத்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் இந்த மூன்றாண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான திட்டங்கள். அதில் முக்கியமானது புதுமைப் பெண் திட்டம். இந்த புதுமை பெண் திட்டம் பெண் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை கவனித்தவர்களுக்கு ஒரு உறுத்தலான விஷயம் தென்பட்டிருக்கும். அதாவது அந்த காலகட்டத்தில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருந்தது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பிலிருந்து நிறுத்தப்படுவது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் அதிகரித்திருந்தது. இந்த நிலைமை மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகளில் மட்டுமல்ல பெருநகரங்களிலும் காணப்பட்டது.

பள்ளியை அணுக இயலாமல் போனதால் கற்றலில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் குழந்தைகளை தங்களோடு வேலைக்கு அழைத்துச் செல்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் போன்ற காரணங்களால் இந்த சூழல் ஏற்பட்டது. கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் (பள்ளியும் இல்லாமல் போனதால்) குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களையும் மனதில் வைத்து விரைவாகத் திருமணம் செய்து கொடுக்கும் சம்பவங்கள் பல அரங்கேறின.

திமுக அரசு பொறுப்பேற்ற உடனே கடுமையான கொரோனா அலையை சமாளிக்க வேண்டி இருந்ததைப் போல பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்ட அதன் பின்விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்தது. முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை புதுமைப் பெண் திட்டம்.

MK STALIN : 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த திமுக அரசு...இது சொல்லாட்சி அல்ல.. செயலாட்சி!- ஸ்டாலின் பெருமிதம்

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் கல்லூரி படிப்பை தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் அமைந்த இந்த திட்டத்தின்படி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அரசு சார்பாக வழங்கப்படும். மாணவிகள் பிற உதவித்தொகைகளை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெறுவதில் எந்த தடையும் இருக்காது. பிறகு இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயின்று பிறகு அரசு பள்ளிகளில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார காரணங்களுக்காக பெண் குழந்தைகள் கல்வியை நிறுத்தும் முடிவில் இருக்கிற பெற்றோர்களும், பெண் குழந்தைகளை விரைவில் திருமணம் செய்து கொடுத்து அனுப்பும் எண்ணத்தில் இருக்கும் பெற்றோர்களும் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்பதே இந்த திட்டத்தின் முதல் பயனாக இருக்கும். திருப்பூர் கோவை சுற்றுவட்டாரங்களில் சுமங்கலி திட்டம் எனும் பெயரில் வேலைக்கு ஆள் எடுப்பார்கள். அதாவது பள்ளிக்கல்வி முடித்த பெண் குழந்தைகள் அந்த ஆலைகளில் ஒப்பந்த பணிக்கு சேர வேண்டும். சில ஆண்டுகள் பணி செய்தால் கிடைக்கும் பணத்தை திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த புதுமைப் பண் திட்டம் அமலான பிறகு இத்தகைய ஒப்பந்த பணிகளுக்கு ஆள் கிடைப்பது மிகப்பெரும் அளவு சரிந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்லூரி படிப்பு பற்றி முன்பை விட அதிகமாக அக்கறை செலுத்துகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அதனை மேலும் வலுப்படுத்த தமிழகத்தின் கல்விப் பின்புலம் பேருதவி செய்கிறது. இத்தகைய பண உதவி திட்டங்கள் மூலம் பின்தங்கிய பகுதிகள் மற்றும் வறிய நிலையில் இருக்கிற மக்களின் குழந்தைகளும் தமது உயர்கல்விக்கான ஊக்கத்தை பெற முடியும். அது தமிழகத்தின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் உருவாகும் பெருமளவுக்கான வேலை வாய்ப்பு அந்தப் பகுதி பெண்களை முன் வைத்தே இருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையில் பெருமளவு பங்கை தமிழ்நாட்டுப் பெண்கள் வகிக்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் மூலம் பெண்களின் தொழில்துறை பங்கேற்பை நாம் இன்னும் பெரிய அளவில் அதிகரிக்க முடியும். சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்ற முன்னெடுப்புகளில் தமிழகம் இந்தியாவிற்கு ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை இன்று பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம்!

அதேபோல பெண்களுக்கான சம வாய்ப்பை உறுதிப்படுத்தும் இத்தகைய திட்டங்கள் மூலம் நாம் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும். இங்கு பெண் குழந்தைகளின் கல்விக்கு தரப்படும் முக்கியத்துவமும் அவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மூலம் குடும்பத்தில் ஏற்படும் முன்னேற்றமும் தமிழகத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் சிந்தனையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களும் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் கல்வி குறித்து கவனம் செலுத்துவதை நாம் பார்க்க முடிகிறது.

இதனை ஒரு ஊக்கத்தொகை எனும் அளவில் சுருக்கி விட இயலாது. கல்லூரி கல்வி என்பது தொடர்ச்சியாக சிறுசிறு செலவுகளை உள்ளடக்கியது. இதற்காக ஒரு மாணவர் தம் பெற்றோரையோ பாதுகாவலர்களையோ அண்டி இருக்கத் தேவையில்லை. அரசு தங்களது கல்விக்கு உரிய உதவியை செய்யும் எனும் நம்பிக்கையோடு அவர்களால் கல்வி கற்க முடியும். மேலும் வேலை நிமித்தம் வெளியூர் செல்லும் பெண்கள் தங்கிப் பணியாற்ற தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு இருப்பதும் மாணவிகள் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சமின்றி கல்வியை தொடர உதவுகிறது. சமூகத்தின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையோடு அமைந்த தமிழ்நாடு அரசின் இத்தகைய திட்டங்கள் பெரிய நம்பிக்கையை விதைக்கக் கூடியவை.

திட்டம் துவங்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பெண் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியை தொடர முடியாமல் போன பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் உயர்கல்வியை தொடங்கி இருக்கிறார்கள். உயர்கல்வி சேர்க்கை இந்த திட்டத்திற்கு பிறகு 27 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு பெருமளவு உதவி செய்யும் இந்தத் திட்டம் இப்போது அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios