முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வருகிற 25ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி, முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பும், அரசாணையும் வெளியானது. அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ.404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின பேச்சு!
இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வருகிற 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “முதலமைச்சர் என்ற முறையில் ஒரு பள்ளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது, ஒரு சில மாணவர்கள் சோர்வாக இருப்பதையும் முகம் வாடி இருப்பதையும் பார்த்தேன். ஏனென்று கேட்டபோது, காலையில் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். ஏழைக் குடும்பத்து தாய்மார்கள் அருகில் உள்ள நிறுவனங்களிலோ, அக்கம் பக்கத்து வீடுகளிலோ வேலைக்குச் செல்லக்கூடிய நிலையில், தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்குக் காலை உணவைக்கூட சரியாகத் தர முடியவில்லையே என்ற கவலையும் தவிப்புமாக அவர்கள் வேலை பார்ப்பதும், சாப்பிடாமல் பள்ளிக்கு வந்த குழந்தைகள், உடல் சோர்வினால் பாடத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதையும் உணர்ந்து கொண்டேன்.
திராவிட மாடல் அரசு பிள்ளைகளுக்குத் தாயாக, தாய்மார்களுக்குப் பிள்ளையாக இருந்து செயலாற்றுகிற அரசு. அதனால்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று 1 முதல் 5-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் பற்றி அமைச்சர்கள், அதிகாரிகள், வல்லுநர்கள் ஆகியோரிடம் ஆலோசித்தபோது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல பள்ளி நாட்களில் காலை நேரத்தில் இதுபோன்ற உணவு வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்கள். இந்தியாவுக்கு முன்னோடித் திட்டங்களை வழங்குகின்ற மாநிலம், தமிழ்நாடு என்கிற வரலாறு தொடரட்டும் என்றேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும், 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் நாள் முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. எதிர்கால சிற்பிகளாம் மாணவர்களின் உடல்நலனும், உள்ள வலிமையும் காத்திடும் வகையில் விரிவாகக்கப்படும் காலை உணவு திட்டத்தை, நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி எனப் போற்றக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயின்ற திருக்குவளைப் பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறேன். இதற்கென இந்த நிதியாண்டில் 404 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
