Asianet News TamilAsianet News Tamil

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின பேச்சு!

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Education should be changed to state list to remove neet MK Stalin speech in independence day
Author
First Published Aug 15, 2023, 9:56 AM IST

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறை மரியாதை, அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்.

அதன்பின்னர், முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு. கலைஞர் நூற்றாண்டில் கோட்டையில் கொடி ஏற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.” என்றார். இந்திய ஒன்றியத்தின் விடுதலை நாள் வாழ்த்துகள்; விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண், தமிழ்நாடு என வரலாற்ரை நினைவு கூர்ந்த அவர், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000இல் இருந்து ரூ.11,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு பல்துறையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் கீழ், தினசரி 50 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதன் மூலம் ரூ.850க்கு மேல் சேமிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளோம்.” என்றார். மேலும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்துக்கு ‘விடியல் பயணம்’ என பெயர் சூட்டப்படுவதாகவும் அறிவித்தார்.

இந்தியா தான் உலகையே வழிநடத்துகிறது.. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..

நீட் தேர்வினால் மாணவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நேற்றைய தினமே காட்டமான அறிக்கை வெளியிட்டு மத்திய பாஜக அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என சுதந்திர தின உரையின் போது வலியுறுத்தினார்.

ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ பணியாளர்களுக்கு தனியே நல வாரியம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கி வருகின்றனர்; நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா சிறப்புரையை முடித்த முதல்வர் ஸ்டாலின், வீரதீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் காவல் பதக்கம், தகைசால் தமிழர் விருது, முதல்வரின் இளைஞர் விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பரிசாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார். தகைசால் தமிழர் விருதினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios