செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா களம் கண்டார்.

முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கன டை பிரேக்கர் ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் மோதினர். ரேபிட் முறையில் நடைபெற்ற இரண்டு ஆட்டத்தின் முடிவில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். அவருக்கு மிகப்பெரும் சவால் கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார்.

உலக ஜாம்பவான்களுடன் மோதி இறுதிப் போட்டி வரை களம் கண்டு போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டில் இருந்த அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பாரட்டினார். மேலும், தமிழ்நாடு வந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறும் முதல்வர் ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிடம் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தையே காப்பாத்த முடியல.. இவரு இந்தியாவை காப்பாத்த போறாராம்.. ஸ்டாலினை எகிறி அடிக்கும் இபிஎஸ்.!

இந்த நிலையில், உலகக் கோப்பை செஸ் போட்டித் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்ற பிரக்ஞானந்தா இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் முகாம் இல்லத்துக்கு சென்று அவரை, செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரக்ஞானந்தாவின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Scroll to load tweet…

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “வெற்றியுடன் சென்னை திரும்பிய இளந்திறமையாளர் பிரக்ஞானந்தாவைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்! பிரக்ஞானந்தாவின் சாதனைகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றன. பிரக்ஞானந்தாவுக்கு நினைவுப்பரிசும், 30 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையும் வழங்கிச் சிறப்பித்தேன். விளையாட்டில் இளம் திறமையாளர்களை வளர்ப்பதற்கான நமது அரசின் உறுதிப்பாட்டை இத்தகைய நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன இதே வேகத்தில் தொடர்ந்து சென்று, வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள், பிரக்ஞானந்தா!” என்று பதிவிட்டுள்ளார்.