Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டும்: ஸ்பெயின் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

TN CM MK Stalin request to Spanish Tamil people to help tamilnadu smp
Author
First Published Feb 5, 2024, 1:28 PM IST

தமிழ்நாட்டில் தொழில்  முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தமிழக அரசு பல்வேறு  முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.  அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அயல்நாட்டில் இருக்கக்கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும் - உதவி புரிய வேண்டும் - அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் - ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதனால் அது செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் தலைவர் கலைஞர் வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. தலைவர் கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம்.” என்றார்.

கொங்கு மண்டலத்துக்கு வேட்பாளர்களை தேர்வு செய்த பாஜக? அமைச்சர் சீட் கன்ஃபார்ம்!

அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி; இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்துக் கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

“உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் அது பெருமைதான்” என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று இருந்தாலும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios