Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்

TN CM MK Stalin letter to union External Affairs Minister regarding fishermen attack smp
Author
First Published Sep 14, 2023, 1:44 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களை விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீனவர்ககளின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முசாஃபர்பூர் படகு விபத்து: 20 குழந்தைகள் மீட்பு!

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அரசுடன் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திடவும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios