இலாக்கா மாற்றம்: ஆளுநருக்கு முதல்வர் மீண்டும் கடிதம் - அமைச்சர் பொன்முடி தகவல்!
அமைச்சரவை இலாக்கா மாற்றம் தொடர்பாக ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து வந்த இலாக்காக்களை பிரித்து கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையை கூடுதலாகவும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதல் பொறுப்பாகவும் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இலாக்கா மாற்றம் தொடர்பாக பரிந்துரைத்து ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார். செந்தில் பாலாஜி வசமிருந்த அமைச்சரவை இலாக்காக்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. அதை நீங்கள் குறிப்பிடாததால் உங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியிருப்பதாக கூறப்பட்டது.
செந்தில் பாலாஜி இலாக்காக்கள் மாற்றம்: பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு? - என்ன காரணம்?
இந்த நிலையில், அமைச்சரவை இலாக்கா மாற்றம் தொடர்பாக ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உடல்நலக்குறைவால் செந்தில் பாலாஜி வசமுள்ள இரு துறைகளை வேறு இரு அமைச்சர்களுக்கு மாற்றி அமைத்துள்ளோம் என முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதம் எழுதினார். செந்தில் பாலாஜியின் பொறுப்புகளை, தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கிறோம் என்று முதல்வர் கடிதம் எழுதி இருந்தார். அரசியலமைப்பு தெரிந்த ஆளுநராக இருந்தால் இதற்கெல்லாம் ஒப்புதல் கொடுத்து இருக்க வேண்டும்; ஆனால் அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை. அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்குவது முதலமைச்சரின் அதிகாரம். ஆளுநருக்கு அதை தெரிவிக்கவேண்டியது கடமை. இதனடிப்படையில் தெரிவித்தார். ஆனால், பாஜகவின் ஏஜெண்ட் ஆக உள்ள ஆளுநர் அதனை ஏற்காமல் Misleading and Incorrect என கூறி திரும்பி அனுப்பியுள்ளார். தற்போது மீண்டும் முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, ஜப்பானில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியதும், செந்தில் பாலாஜி மீதான வழக்கை குறிப்பிட்டு அவர் அமைச்சராக தொடரக்கூடாது என ஆளுநர் ரவி கடிதம் எழுதியிருந்தார். அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் இருக்கிற காரணத்தினால், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது. மத்திய அமைச்சர் அமித்ஷா மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? தற்போது உள்ள ஒன்றிய அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை பதவி நீக்க கோரி ஆளுநர் கடிதம் எழுதுவாரா? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார் எனவும் அமைச்சர் பொன்முடி அப்போது தெரிவித்தார்