முதல்வரின் காலை உணவுத் திட்டம் ரூ.404 கோடியில் விரிவாக்கம்: அரசாணை வெளியீடு!
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி, முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டிருந்தது.
மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தின் கீழ், உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில்: வரப்போகும் சூப்பர் வசதி!
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பும் வெளியானது.
இந்த நிலையில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ.404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார். அதில், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள், தேவையான உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், இந்த திட்டத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை துரிதமாக முடித்து, ஜூன் மாதத்தில் காலை உணவுத் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.