15 ஆண்டுகள்... 19 ஆயிரம் கருக்கலைப்புகள்... திருவண்ணாமலையில் பகீர்!
திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஆனந்தி என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஆனந்தி என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீட்டில், சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் கடந்த 1ம் தேதி நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிவந்தது. இதனையடுத்து போலி பெண் டாக்டர் ஆனந்தி(51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனந்தியின் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்ட வீடு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. இவர் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக 2 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்பி சிபிசக்ரவர்த்தி ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது 2,400 சதுர அடி பரப்பளவில், லிப்ட் வசதியுடன் கூடிய 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தபோது, பதுங்கு குழிகள் போன்ற ரகசிய அறைகள் இருந்ததும், மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குற்றச்செயலில் ஈடுபட்ட இவர்களின் வங்கி கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் சோதனை நடந்த அன்று மட்டும் 25 பேர் கருக்கலைப்புக்காக அப்பாய்ன்ட்மென்ட் பெற்றிருந்தனர். ஆனந்தியின் பெயரில் இரண்டு ஆதார் எண்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.