மீஞ்சூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tiruvallur Clash North Indian Workers vs Police! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில், எல்&டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றிரவு அங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் மாடியில் ஏறும் போது அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்
சக தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், போராட்ட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். . "இது சட்டப்படி தீர்க்கப்படும், அமைதியாக விசாரணையைப் பொறுத்துக்கொள்ளுங்கள்" என அறிவுறுத்தினர். ஆனால், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
போலீசார் மீது கல்வீசி தாக்குதல்
போலீசார் அவர்களை கலைந்து செல்ல கூறியபோது ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், திடீரென கற்களை எடுத்து போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். ஒருகட்டத்தில் போராட்டம் கையை மீறிச் சென்றதால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வடமாநில தொழிலாளர்களை விரட்டியடித்தனர்.
பதற்றமான சூழ்நிலை
போராட்டக்காரர்களின் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாகவும், சம்பவத்தைப் பதிவு செய்ய வந்த 4 செய்தியாளர்களும் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துக்கு பிறகும் வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களில் 50 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
