திருநெல்வேலி அருகே பள்ளி ஆண்டுவிழாவில் அதிக மின் திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தியதால் மாணவர்கள் கண் பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியுள்ளனர். 

மின்விளக்குகளிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சுகள் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து விழா முடிந்து வீட்டிற்கு சென்றதும் அனைவருக்கும் கண் எரிச்சல் அதிகமாகியுள்ளது. 

இதைதொடர்ந்து இன்று காலை அனைவரும் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கண் மருத்துவர், மாணவர்களுக்கு பயப்படும் வகையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அதிக திறன் கொண்ட ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாகவே கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். 

உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்றும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனையில் குழந்தைகளை சந்தித்து நலம் விசாரித்தார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகத் திறனுள்ள மின்விளக்கொளி பட்டதால் மாணவர்களின் கண்களில் நீர் வடிதல், கண் சிவந்திருத்தல் ஆகிய அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.

எவருக்கும் பார்வை பாதிக்கப்படவில்லை என்றும் அனைவரும் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆனாலும் பெற்றோர்கள் இதுகுறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் பால சுப்ரமணியன், எலெக்ட்ரீசியன் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.