ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வரும் இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உடந்தையாக இருந்த விடுதி உரிமையாளர், மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பலபெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி சின்னதம்பி தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு அறையில் இளம்பெண்ணுடன் ஒருவர் உல்லாசமாக இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் கே.வி.எம்.நகரை சேர்ந்த சிவகுமார் (43) என தெரிந்தது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார். 

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வரும் இளம்பெண்களை மிரட்டி விடுதிக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் இளம்பெண்களை பிடித்துவைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டுவார். பணம் இல்லாத பெண்கள், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சும்போது உங்களை வெளியே விடவேண்டும் என்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறுவார். அதன்படி மிரட்டியே பல இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

இதில் சிவகுமாருக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை சேப்பாக்கம் முருகப்பா தெருவை சேர்ந்த விடுதி உரிமையாளர் காந்த் (52), கடலூரை சேர்ந்த விடுதி மேலாளர் தேவ குரு (63). ஆகியோரை கைது செய்தனர். சிவகுமார், எத்தனை இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். சிவகுமார் பிடியில் இருந்து மீட்கப்பட்ட ராயபுரம் காசிமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.