தமிழ்நாட்டின் அடுத்த புரட்சி: அர்ச்சகராகும் 3 பெண்கள்!
தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்த பெண்கள் மூன்று பேர் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு புரட்சிகர திட்டங்களும் இங்கிருந்தே தொடங்கப்பட்டுள்ளன. கடவுள் மறுப்பை மிகத்தீவிரமாக பேசிய தந்தை பெரியார், அனைத்து சாதியினரும் கோயில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வந்தார். இது தொடர்பான சட்டத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இயற்றினார்.
ஆனாலும், இந்த சட்டத்தை எதிர்த்த வழக்குகளால் கலைஞர் கருணாநிதியால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. தொடர்ந்து, முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தலித் சமூகத்தினர் உட்பட அனைத்து சாதியை சேர்ந்த 28 பேரை பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்தார். இதனை எதிர்த்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
முன்னதாக, முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிகாலத்தின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டம் 2006ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமயக் கோயில்களுக்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும், ஸ்ரீரங்கம், திருவல்லிகேனி ஆகிய இடங்களில் வைணவத்திற்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன.
சனாதன கலாச்சாரத்தை இழிவுபடுத்த இந்தியா கூட்டணிக்குள் போட்டி: ஜே.பி. நட்டா தாக்கு!
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அர்ச்சகர் பயிற்சிகான பள்ளிகள் புணரமைக்கப்பட்டு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பள்ளியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பெண்கள் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை. அர்ச்சகர் பயிற்சி முடித்த இந்த மூன்று பெண்களும் விரைவில் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்.” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், “சந்நிதியில் சமத்துவ சுடரொளி! கருவறையில் பாகுபாடற்ற இறைப்பணி! சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல். அகற்றப்பட்ட முள்மட்டுமல்ல, சூட்டப்பட்ட புதுமலர்! போற்றி மகிழ்வோம்.” என தனது எக்ஸ் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.