ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவரை, பைக்கில் வந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பூந்தமல்லி அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் அன்பழகன். இவர் நேற்று வழக்கமாக இரவு காட்டுப்பாக்கம் ஹட்கோ நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பைக்கில் மூன்றுபேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி அன்பழகன் விசாரித்துள்ளார். அப்போது பைக்கில் வந்தவர்கள், திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து அன்பழகனை சரமாரியாக வெட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். காவலரைத் போதை ஆசாமிகள் தாக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சக போலீசார் ஒருவர் தாக்கப்பட்டதைப் பார்த்த அருகில் இருந்த போலீசார், காரில் சென்று அந்த மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதன் பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில்,  அவர்கள் மூன்று பேரும் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. அவர்களது பெயர் பன்னீர்செல்வம், சுதீஷ்குமார், ரஞ்சித் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. காயம்பட்ட போலீசார் அன்பழகன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.