தேனி

தேனியில் குடிபோதையில் கார் ஓட்டிவந்தவர் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில் பயணித்த மூவர் பலத்த காயம் அடைந்தனர். கார் ஓட்டியவரை காவலாளர்கள் உடனே கைது செய்தனர்.

தேனி மாவட்டம், குமுளியைச் சேர்ந்தவர் சலீம் (54) வியாபாரி. திங்கள்கிழமை இரவு கம்பத்திலிருக்கும் உறவினர்களைப் பார்த்துவிட்டு, நேற்று மறுபடியும் ஊருக்கு தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

கம்பம்  - கூடலூர் அப்பாச்சி பண்ணை நெடுஞ்சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, கூடலூரில் இருந்து கம்பத்தை நேக்கி வந்த ஆட்டோ மீது வேகமாக மோதியுள்ளார். இதில், ஆட்டோ அப்பளம்போல நொறுங்கியது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த கூடலூரைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (53), அவரது மனைவி ஈஸ்வரி (50), ஆட்டோ ஓட்டுநர் முத்து (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கூடலூர் வடக்கு காவலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  

காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய சலீம் குடி போதையில் இருந்ததை கண்டிபிடித்த காவலாளர்கள் உடனே அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சலீமிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.