Three friends died while travelling in single bike by car hits fastly

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில், ஒரே பைக்கில் பயணித்த நண்பர்கள் மூவரும், அசுர வேகத்தில் வந்த கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, வஞ்சியாபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் வினித், சரவணன் மற்றும் ஜெய்கணேஷ். இவர்கள் மூவரும் கூலி வேலை செய்துவந்தனர். 

நேற்று முன்தினம் ஆனைமலை அருகேவுள்ள சோமந்துறையில் வேலையை முடித்துவிட்டு அதற்கான கூலியையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வஞ்சியாபுரம் திரும்பினர், மூவரும் ஒரே மோட்டார் பைக்கில் இரவு நேரத்தில் வந்துக் கொண்டிருந்தனர். வண்டியை வினித் ஓட்டினார்.

இவர்கள் பொள்ளாச்சி - கோட்டூர் பிரதான சாலை சூளேசுவரனபட்டி என்.ஜி.ஓ காலனி அருகே வந்துக் கொண்டிருந்தனர். அப்போது கோட்டூரில் இருந்து அசுர வேகத்தில் கார் ஒன்று வந்தது. அந்த கார், மோட்டார் பைக்கின் மீது அசுர வேகத்தில் மோதியது.

இதில் மோட்டார் பைக்கில் பயணித்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வண்டியை ஓட்டிவந்த வினித் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெய்கணேஷ் மற்றும் சரவணனுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுவேகத்தில் வந்த காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. காரில் பயணித்தவர் எந்தவித காயங்களும் இன்றி உயிர்தப்பினார்.

விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் ஆய்வாளர் நடேசன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

சாலை விதியை மீறி ஒரே பைக்கில் பயணித்த நண்பர்கள் மூவரும் சாலை விதிகளை மீறி அசுர வேகத்தில் வந்த கார் மோதி இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.