Asianet News TamilAsianet News Tamil

300 பேருக்கு மூன்றே கழிவறைகள்  - அடிப்படை வசதிகள் கேட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டம்...

Three Bathrooms for 300 students Demonstrate by Nurse Training students for asking Basic Facilities ...
Three Bathrooms for 300 students Demonstrate by Nurse Training students for asking Basic Facilities ...
Author
First Published Mar 10, 2018, 8:49 AM IST


நாகப்பட்டினம்

300 மாணவிகள் படிக்கும் செவிலியர் பயிற்சி பள்ளியில் மூன்று கழிவறைகள் இருப்பதால் அவதியுற்ற மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி  ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நான்கு வருட பட்டயப்படிப்பில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்தக் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம் என்ற நிலையில் உள்ளது. மேலும், இந்தப் பயிற்சி பள்ளியில் மூன்று கழிவறைகள் மட்டுமே உள்ளன. 

குடிநீர், குளியல் அறை மற்றும் தங்குவதற்குரிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே இந்த பயிற்சி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதுடன், மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கடந்த 5-ஆம் தேதி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது மூன்று நாள்களில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தை மாணவிகள் கைவிட்டனர். 

ஆனால், மூன்று நாள்கள் ஆகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் நேற்று மருத்துவமனை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினம் கோட்ட உதவி ஆட்சியர் கார்த்திகேயன், தாசில்தார் ராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில், "சேதமடைந்துள்ள கட்டடத்தை புதுப்பித்து, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மருத்துவமனையில் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கென மாற்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய கட்டிடம் புதுப்பிக்கும் பணி முடிந்தவுடன் மீண்டும் விடுதிகள் அங்கே மாற்றப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios