Asianet News TamilAsianet News Tamil

பயங்கரவாத கும்பலை சேர்ந்த மூவர் கைது; வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் - திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

Three arrested in terror group information passed by whatsapp
Three arrested in terror group information passed by whatsapp
Author
First Published Apr 3, 2018, 8:41 AM IST


இராமநாதபுரம்
 
வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை  பரிமாறிக் கொண்டு பயங்கர சதி திட்டங்களுடன்  இரகசிய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகி வீரபாகு கடந்த சில நாள்களுக்கு முன்னர் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவலாளர்கள் சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், "பயங்கர சதி திட்டங்களுடன் பயங்கரவாத கும்பல் ஒன்று இரகசிய கூட்டம் நடத்தி செயல்பட்டு வருவதும் இந்த கும்பல் முதல்கட்டமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கூட்டம் நடத்தி விவாதித்ததோடு, அதன் அடுத்த கட்டமாக கீழக்கரையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்" என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படை காவலாளர்களும், சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலாளர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக காவலாளர்கள் கீழக்கரைக்கு சென்று கிழக்குத் தெரு பகுதியில் முகமது பக்கீர் என்பவரின் மகன் முகமது ரிபாஸ் (35) என்பவரை கைது செய்தனர்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் கீழக்கரையில் திருமணம் செய்து குடியிருந்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் கைதாகி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இவரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். 

அதில், "வீரமரணம் எங்கள் இலக்கு" என்ற கொள்கையின் அடிப்படையில் தாங்கள் வாட்ஸ்-அப்பில் குழுவாக செயல்படுவதாகவும், தங்கள் குழுவின் சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முதல் கூட்டம் நடத்தி 2-வதாக கீழக்கரையில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தேவிப்பட்டினம் சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்த உசேன் முபாரக் மகன் முபாரிஸ் அகமது (21) என்பவரையும், தேவிப்பட்டினம் பஸ்நிலையத் தெரு ஜாகிர் உசேன் மகன் அபுபக்கர் சித்திக் (23) என்பவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். அபுபக்கர் சித்திக், சென்னை தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதான மூன்று பேரிடமும் இருந்து வாள், கத்தி போன்ற ஆயுதங்களும், மூன்று செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்டஸ்காவல் கண்காணிப்பாளர் ஒம்பிரகாஷ்மீனா, "திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு கடந்த ஓராண்டாக செயல்பட்டு வந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 

வாட்ஸ் -அப் குழுவின் அடிப்படையில் இவர்களின் செயல்பாடு இருந்து வந்துள்ளது. தகவல் பரிமாற்றம் செய்வதை அழைப்பின் மூலமாக தவிர்த்து வந்துள்ளனர். வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்து கொள்ளும் தகவலின் அடிப்படையில் தங்களின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

காவலாளர்களிடம் சிக்கியதும் மேற்கண்ட மூன்றி பேரும் தகவல்களை அழித்துவிட்டனர். வீரமரணம் எங்களின் இலக்கு என்று குழுவின் பெயர் மட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களுக்கென தனி நாடு உருவாக்க வேண்டும், இறைவனை தவறாக பேசுபவர்களை தண்டிக்க வேண்டும், அதன்மூலம் இனி யாரும் தவறாகப் பேசக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக துண்டுபிரசுரங்களை வினியோகித்து பணம் சேகரிப்பது, அந்த பணத்தின் மூலம் சிறையில் உள்ள தலைவர்களை விடுதலை செய்யபாடுபடுவது என்று முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த குழுவின் முக்கிய தலைவராக தேவிப்பட்டினத்தை சேர்ந்த நபர் இருப்பதும், அவரது தலைமையின் கீழ் தேவிப்பட்டினம், கடலூர் பரங்கிப்பேட்டை, திருவாரூர் முத்துப்பேட்டை பகுதிகளை சேர்ந்த இன்னும் சிலர் இந்த குழுவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

மீதமுள்ள நபர்களை பிடிக்க தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். கீழக்கரையில் கடந்த 30-ஆம் தேதியே இந்த கும்பல் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

காவலாளர்கள் விசாரிப்பதாக தகவல் கிடைத்ததால் கூட்டத்தை கடந்த 1-ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். பின்னர் காவலாளர்கள் தகவல் தெரிந்து தங்களை நெருங்குவதை அறிந்து கூட்டத்தை நடத்தாமல் தப்பிச் சென்றுவிட்டனர். பிடிபட்ட முகமது ரிபாஸ் மூலமே இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. 

கும்பலை சேர்ந்தவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறதா? என்பதை கண்டறிய சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன" என்று அவர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios