தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி. தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 மாதங்களுக்கான மகளிர் உதவித் தொகை மொத்தமாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.

தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.