திருச்சி 

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் இருந்து இறங்கிய சென்னையை சேர்ந்த மூவர் 1090 கிராம் தங்கம் கடத்தி அதிகாரிகளிடம் வசமாக சிக்கினர். 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது, சென்னையைச் சேர்ந்த மகரூப் என்பவர் 290 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மதிப்பு ரூ.9 இலட்சம் இருக்கும் என்று கூறினர்.

பின்னர், அதே விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த அமீன் என்பவரிடமிருந்து ரூ.11 இலட்சம் மதிப்பிலான 360 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று, சென்னையை சேர்ந்த அப்துல் சமத் என்பவர் ரூ.13½ இலட்சம் மதிப்பிலான 440 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனையும் பறிமுதல் செய்தனர். 

இப்படி மூன்று பேரிடமும் மொத்தம் ரூ.33½ இலட்சம் மதிப்பிலான 1090 கிராம தங்கம் பிடிபட்டது. அவர்கள் மூவரையும் பிடித்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.