Three arrested for counterfeiting Rs.100 rupees notes

ஈரோடு

ஈரோட்டில் நூறு ரூபாய் கள்ளநோட்டுகளை கடைகளில் சில்லறை வாங்குவதுபோல புழக்கத்தில் விட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 180 நூறு ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கோபி பச்சைமலை அடிவாரத்தைச் சேர்ந்தவர் கைலாசம். இவர் மளிகைக் கடை ஒன்றை வைத்திருக்கிறார். இவரது மளிகைக் கடைக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அதில், அந்த ஆண் மட்டும் கடைக்குச் சென்றுள்ளார். பெண் கடையின் அருகே நின்றுக் கொண்டிருந்தார்.

கடைக்காரர் கைலாசத்திடம் அந்த நபர் ரூ.100 கொடுத்து ரூ.20–க்கு பிஸ்கட் வாங்கியுள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த 100 ரூபாய் நோட்டை கைலாசம் உற்றுப் பார்த்தார். அந்த நோட்டு வித்தியாசமாக இருக்கவே கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உடனே கைலாசம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவலாளர்கள் அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சித்தோட்டை சேர்ந்த டேனியல் (47), கௌந்தப்பாடி வெட்டைவாய்க்காலைச் சேர்ந்த செல்வி (45) என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து கடைகளில் ரூ.100 கள்ளநோட்டுகளை கொடுத்து மாற்றி வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

டேனியல் மற்றும் செல்வி கொடுத்த தகவலின்பேரில் ரூ.100 கள்ளநோட்டுகளை மாற்றுவதற்காக வைத்திருந்த பவானி அருகே உள்ள குமாரபாளையத்தைச் சேர்ந்த ஷேக்முகைதீன் (39) என்பவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் மொத்தம் 180 நூறு ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.