Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கை நிராகரிப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது

Thoothukudi sterlite gun shot Final report filed by CBI rejected smp
Author
First Published Dec 7, 2023, 3:39 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 22.05.2018 அன்றும் 23.05.2018 அன்றும் 15 பேர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பலர் கொடும் காயமடைந்தார்கள்.

துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் 28.05.2018 அன்று சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார்.

பின்னர், துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பொதுநல மனுக்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதுடன் துப்பாக்கி சூடு தொடர்பாக கே.எஸ்.அர்ச்சுனனின் புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டுமென்று சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், சிபிஐ ஏற்கனவே போலீஸாரால் பதிவு செய்யப்பட்டிருந்த அதே முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணையை துவக்கியதோடு கே.எஸ்.அர்ச்சுனன் புகார் மனு மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடவில்லை. எனவே, சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. அதன் பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கைகையை நிராகரித்திட வேண்டுமென்றும், படுகொலைகள் மற்றும் குற்றசெயல்களில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆட்சேபனைகள் கே.எஸ்.அர்ச்சுனனால் எழுப்பப்பட்டு ஆட்சேபனை மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது சிபிஐயின் பதில் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மக்களவையில் மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி. செந்தில்குமார்

இந்த நிலையில், அன்று மதுரை சிபிஐ தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பசும்பொன்சண்முகையா, சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிராகரித்தும், சிபிஐ முறையாக விசாரணை நடத்தி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது ஆறு மாத காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்திட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, துவக்கம் முதலே அனைத்து சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு படுகொலைகள் மற்றும் அராஜகங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் ஒரே குற்றவழக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தாக்கல் செய்துள்ள இவ்வழக்கு என்பது குறிப்பிடதக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios