மக்களவையில் மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி. செந்தில்குமார்

திமுக எம்.பி., செந்தில்குமார் தனது பேச்சுக்கு மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார்

DMK MP Senthil Kumar apologized in Lok Sabha on his gaumutra comment smp

நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று முன் தினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், “கோ மூத்திர மாநிலங்கள் (பசு கோமிய மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை.” என்றார்.

செந்தில் குமார் எம்.பி.யின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமது பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்துள்ள திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் மன்னிப்பும் கேட்டுள்ளார். “நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு!

இந்த நிலையில், திமுக எம்.பி., செந்தில்குமார் தனது பேச்சுக்கு மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், தனது கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார். “கவனக்குறைவாக நான் வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின்உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதை நாம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம்  மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios