தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்க முடிவெடுத்து அதற்கான நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டும், கையகப்படுத்தப்பட்டும் விமான நிலைய விரிவாக்க இயக்குனரிடம் ஆட்சியர் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வகையில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக குமாரகிரி, கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல் மற்றும் சேர்வைக்காரன்மடம் ஆகிய நான்கு கிராமங்களிலும் 600.93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வந்தது. அதன்படி 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நில எடுப்பு நடவடிக்கைகளும் 366.24 ஏக்கருக்கு முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க இயக்குனர் சுப்பிரமணியனிடம் நேற்று மதியம் ஒப்படைத்தார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அழகர்சாமி, விமான நிலைய துணை இயக்குனர் கார்த்திகேயன், பொறியியலாளர் கஸ்தூரி, விமான நிலைய மேலாளர் ஜெயராமன், செய்யது மற்றும் நில எடுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.