சென்னையில் ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் என்னென்ன வசதிகள் உள்ளன? நுழைவுக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் 42.45 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார். இந்த பூங்கா கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இப்போது தமிழக அரசு இந்த பூங்காவை ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சீரமைத்துள்ளது.

புதுப்பொலிவுடன் தொல்காப்பியப் பூங்கா திறப்பு

அதாவது நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற வசதிகள் செய்யப்பட்டு தொல்காப்பியப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி பாதை

தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் (Triple Cell Box Culvert) அமைக்கப்பட்டுள்ளது.

மையமாக 'தொல்காப்பியப் பூங்கா', சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பட்டு, சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகின்றது. இயற்கை சூழ்நிலை நிறைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 3.20 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எந்தெந்த நேரம் பார்வையிடலாம்?

தொல்காப்பியப் பூங்காவினை பொதுமக்கள் (ஒருவேளையில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல்) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (வியாழக்கிழமை தவிர) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் பார்வையிடலாம். மேலும், மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள் (பள்ளி /கல்லூரி) அதிகபட்சம் 100 மாணவர்கள் ஆசிரியர்களுடன் திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (வியாழக்கிழமை தவிர) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பார்வையிடலாம். பாராமரிப்பு பணிகளுக்காக வியாழக்கிழமை பூங்காவுக்கு விடுமுறை விடப்படும்.

நுழைவுக் கட்டணம் எவ்வளவு?

மேலும் அனைத்து நாட்களும் (திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் உட்பட) காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்களுக்கான நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

நடைபயிற்சி செய்யவும் கட்டணம்

இதேபோல் நடைபயிற்சி செய்ய வேண்டுமானாலும் ஒரு நபருக்கு ரூ.20 செலுத்தி தான் உள்ளே செல்ல முடியும். www.crrt.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பூங்கா நுழைவு கட்டண டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் நுழைவுசீட்டு கட்டணம், முன்பதிவு மற்றும் பிற விவரங்களுக்கு www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.