காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை விநாடிக்கு 15  ஆயிரம்  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

குடகு உள்ளிட்ட காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
 இந்த அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக, இன்றுகாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம்  கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. 
நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் ஒன்றரை  அடி அதிகரித்து, தற்போது 46  புள்ளி 2  ஒன்று அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்சட்டி, கேரட்டி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கலில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 500 கனஅடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, தற்போது 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. 
மேலும் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.