உண்மை குற்றவாளிகளை தப்ப வைக்க திமுக அரசு நடத்தும் நாடகம்தான் திருவேங்கடம் எண்கவுடர்? சந்தேகம் எழுப்பும் சீமான்
என்கவுண்டர் எனும் பெயரில், விசாரணை சிறைவாசிகளைக் கொலை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதான ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நடந்தது என்ன?
காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை சிறைவாசி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை சிறைவாசியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத் திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகச் சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.
உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது. தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங்கை முதல் வெட்டு வெட்டிய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்! துப்பாக்கி! நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்!
என்கவுண்டர் எனும் பெயரில், விசாரணை சிறைவாசிகளைக் கொலை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீதான மக்களின் கோபத்தையும், ஆளும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியையும் மட்டுப்படுத்த வேண்டுமானால் என்கவுண்டர்கள் உதவலாமே ஒழிய, அது ஒருநாளும் குற்றத்துக்கான முழுமையானத் தீர்வில்லை. ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணை சிறைவாசி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.