திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் மரணம் அடைந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் இச்சம்பவத்தை கண்டித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என உறுதியளித்துள்ளார்.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணையைத் தொடராலம் என்று தெரிவித்துள்ளது; இருந்தாலும் விசாரணை குறித்து எந்த ஐயமும் எழாமல் இருக்க சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் யாராலும் நியாயப்படுத்த முடியாத மிகக் கொடூரமான தவறு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு அவர் ஆறுதல் கூறினார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
அப்போது, "இந்த இளைஞருக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது. கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு உரிய தண்டனை பெற்றுத் தரும்," என்று முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார். இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம், நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்குமார் குடும்பத்தினருடன் பேசிய முதல்வர்
முன்னதாக மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித்குமாரின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் தாயிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்பட்டும் எனவும் உறுதி அளித்தார்.
"திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை நியாயப்படுத்த முடியாத தவறு. இளைஞருக்கு நடந்த இந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது. கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு உரிய தண்டனை பெற்றுத் தரும்." என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
