காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், ராகுல் காந்தி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தாலும், கட்சியை வலுப்படுத்த மாநில வாரியாக தலைவர்களை கண்டறிந்து பிரதானப்படுத்த என  திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார். 

காங்கிரஸ் தோல்வி- மன வலி தருகிறது

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி அமைக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி கூட்டணி கட்சி என்ற முறையில் எங்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது. பிரதான எதிர்க்கட்சிகள் போட்டி இடவில்லை என்றாலும் மக்கள் வாக்களித்து தான் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் டெல்லியில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது வருத்தத்துக்குரிய விஷயம் தான். மன வலியும் வருத்தமும் தரக்கூடிய விஷயம்தான் என தெரிவித்தார்.

காங்கிரஸ் சுய பரிசோதனை செய்யனும்

காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், ராகுல் காந்தி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் அதில் சந்தேகம் இல்லை. இரவு பகலாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆனால் ஒரு ஆள் தேச முழுவதும் சென்று 140 கோடி மக்களையும் சந்திக்க முடியாது. காங்கிரஸ் சுய பரிசோதனை செய்ய வேண்டும். மாநில வாரியாக மூன்று நான்கு தலைவர்களை கண்டு அவர்களை பிரதானப்படுத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மீது வெறுப்பால் மக்கள் டெல்லியில் மாற்றத்தை விரும்புனார்கள். அந்த மாற்றத்திற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

குறைவான இடங்களில் போட்டியிட முடியாது

ஆட்சி அதிகாரத்தில் பாஜக இருந்ததால் பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என தெரிவித்தார். மாநிலத்திற்கு மாநிலம் கூட்டணி கட்சிகளின் பலம் வேறுபடும். தமிழ்நாட்டில் காங்கிரஸோடு பெரிய கட்சி திமுக. அதனால் அவர்கள் அதிக இடத்தில் போட்டி போடுகிறார்கள். அதனால் அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் கொடுக்கும் குறைவான இடத்தில் நின்று தேர்தலை சந்திக்க முடியாது என தெரிவித்தார். மேலும் டெல்லி தேர்தலில் காங்கிரஸ் மட்டும் பாதிக்கப்படவில்லை ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மி ஆட்சியை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு என்ன பயன்

கூட்டணி பொருத்தவரை சாதகம் பாதகம் இரண்டையும் பார்த்து தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர ஒரு சார்பாக முடிவெடுக்க முடியாது என கூறினார். டெல்லியில் ஆம்ஆத்மி காங்கிரஸ் கூட்டணியில் நின்றிருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்திருக்கலாம். வெற்றி பெற்று இருந்தாலும் ஆம்ஆத்மி தான் ஆட்சி அமைத்திருக்கும். அதில் என்ன காங்கிரஸ்க்கு பயன் அதில் என்ன நன்மை கிடைத்திடப் போகிறது. தற்போது காங்கிரஸ் தனித்து டெல்லியில் போட்டியிட்டதால் கட்சியின் நிலையாவது தெரிந்துள்ளது திருநாவுக்கரசர் கூறினார்.