சென்னை, மெரினாவில் இருந்து அகற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை, கடற்கரை சாலையில் காந்தி - காமராஜர் சிலைக்கு நடுவில் மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கல சிலை திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்டது.

அந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிலையை அங்கிருந்து அகற்றவும் உயர்நீதிமன்றமும் கூறியது.

கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்படும் சிலை, சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அகற்றப்படும் சிவாஜி சிலை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி, காமராஜர் சிலைகளின் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அகற்றப்படும் சிவாஜி கணேசனின் சிலை, கடற்கரை சாலையில் காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளர். அதில்,

பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், அம்பேத்கர் உள்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம் அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளது.

அதுபோல் சிவாஜி கணேசனுக்கும் மணிமண்டபமும் சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும். அதோடு, தலைவர்கள், அறிஞர்களின் சிலைகள் பொதுமக்கள் பார்வையில் படும்படியான இடத்தில் அமைப்பதுதான் சிறப்பு.

அதுமட்டுமின்றி, சிவாஜிகணேசனுக்கு சென்னையில் அமைந்துள்ள ஒரே சிலையாக இது உள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நடிகர்திலகத்தின் சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும்போது, சென்னை, கடற்கரை சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்கவேண்டும் என்றும்  மணிமண்டபத்தில், நடிகர்திலகத்தின் வேறு சிலையை அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.