thirumurugan gandhi pressmeet about his arrest
மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக, தன் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.
குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.

இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.
ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே உள்ள வழக்குகளின் அடிப்படையில் தான் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேனாம்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாகவும், அலுவலகம் மீது கல்வீசியாதாகவும் கூறி திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அருண் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது.
தற்போது மேலும் ஒரு வழக்கு திருமுருகன் காந்தி மீது பாயபட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடியதாக, அவர் மீது சைதாப்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்குகளில் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருமுருகன் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக, தன் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக குற்றம் சாட்டினர்.
