காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் தோல்வி என அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. 

Kashmir attack tourist deaths : காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் கண் மூடித்தனமாக சுட்டதில் சுற்றுலா பயணிகள் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் தோல்வி தான் இந்த தீவிரவாத தாக்குதல் என அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். 

பயங்கரவாதிகள் தாக்குதல் - 25 பேர் பலி

பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தனை ஆயிரம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தும், 24 மணிநேரமும் உளவுத்துறையால் திறந்தவெளி சிறைபோல காஷ்மீர் முழுவதும் கண்காணிக்கப்பட்டும் இராணுவ சீருடை அணிந்து பயங்கரவாதிகள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால் இந்தியப் பாதுகாப்புத்துறையும், உளவுத்துத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது? இக்கொடிய நிகழ்வு இந்திய ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வியாகும். 

இந்த நாட்டில் உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அல்லது தாக்குதல் நடைபெறட்டும் என்று வேடிக்கை பார்த்ததா? என ஐயம் எழும் அளவிற்கு முற்று முழுதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயிள்ளது. இதுபோன்ற இரக்கமற்ற கொடுந்தாக்குதல்கள் இனியும் நடைபெறா வண்ணம் தடுத்து, நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியதும், காஷ்மீரில் அமைதி, பாதுகாப்பானச் சூழலை உறுதிசெய்து, அங்கு வாழும் மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்திய ஒன்றிய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசின் முழுமுதற் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு தோல்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், காஷ்மீரில் நடைபெற்ற கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதம் நசுக்க வேண்டும், பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு காஷ்மீர் விஷயமாக எடுத்த நடவடிக்கைகள் இந்த விளைவுகளை உருவாக்கியுள்ளது. உளவுத்துறையின் தோல்வி அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது.

370 பிரிவை அகற்றிவிட்டால் தீவிரவாதம் இருக்காது என பாஜக கூறி வந்தது. இதனையடுத்து 370 பிரிவு நீக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் செல்லலாம் என அறிவித்தார். இதனை நம்பி சென்ற பயணிகள் படுகொலையாகியுள்ளனர். எனவே இதற்கு அமித்ஷா பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.