திருமாவளவனை திட்டிய 'டாஸ்மாக்' ஊழியர்...வைரல் ஆடியோவால்.. கொதித்தெழுந்த சிறுத்தைகள்..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தகாத வார்த்தையால் விமர்சித்த, ‘டாஸ்மாக்’ கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு எதிர்புறமுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிபவர் முருகேசன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கடுமையாக தகாத வார்த்தையால் விமர்சித்து, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஆடியோ வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோ திருப்பூர் முழுக்க பரவியது. வைரலாகி வரும் இந்த ஆடியோவை கேட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொதித்தெழுந்தனர். இதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிசாமி தலைமையில், 15க்கும் மேற்பட்ட கட்சியினர், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமாவளவனை அவதூறாக பேசிய டாஸ்மாக் பணியாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர். பிறகு, கடை விற்பனையாளர் முருகேசன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, அவினாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.