அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்கை ஆளுநர் ரவி கையாள்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து வந்த இலாக்காக்களை பிரித்து கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையை கூடுதலாகவும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதல் பொறுப்பாகவும் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இலாக்கா மாற்றம் தொடர்பாக பரிந்துரைத்து ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், செந்தில் பாலாஜி வசமிருந்த அமைச்சரவை இலாக்காக்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து விட்டார். செந்தில் பாலாஜி மீதான வழக்கை குறிப்பிட்டு அவர் அமைச்சராக தொடரக்கூடாது என ஆளுநர் ரவி ஏற்கனவே தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. அதை நீங்கள் குறிப்பிடாததால் உங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என கூறி, Misleading and Incorrect என குறிப்பிட்டு இலாக்கா மாற்ரம் தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி விட்டார்.
அமலாக்கத்துறை - சிபிஐ என்ன வித்தியாசம்? சக்திவாய்ந்ததாக அமலாக்கத்துறை உருவாக என்ன காரணம்?
இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஆளுநருக்கு இலாக்கா மாற்றம் தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். ஒருவேளை ஆளுநர் ஏற்க மறுக்கும்பட்சத்தில் தமிழக அரசு தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்கை ஆளுநர் ரவி கையாள்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார் ? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது.” என பதிவிட்டுள்ளார்.
