தம்பி விஜய்யும், தம்பி சீமானும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. பாஜக பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. திமுகவை ஒரு தீய சக்தி என்று விஜய் சொல்கிறார். அவர் முடிந்தால் திமுகவை அழித்து விட்டு போகட்டும்

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பாஜக, சனாதன கும்பல் மதவெறி அரசியல் செய்வதாக கூறி அதனைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விசிகவினர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் பாஜக எண்ணம் பலிக்காது

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் மத்தியில் பேசிய திருமாவளவன், ''திருப்பரங்குன்றம் விவகாரம் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம். எப்படியாவது மதப்பிரச்சனையை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றனர். பாஜகவின் ஜம்பம் பீகாரில், உத்தரபிரதேசத்தில் பலிக்கலாம். தமிழ்நாடு தனித்தன்மை வாய்ந்த மாநிலம். தமிழ்நாட்டில் உங்கள் ஜம்பம் பலிக்காது.

விஜய்யும், சீமானும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள்

பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழகத்தில் நுழைய முடியாது. தம்பி விஜய்யும், தம்பி சீமானும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. பாஜக பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. திமுகவை ஒரு தீய சக்தி என்று விஜய் சொல்கிறார். அவர் முடிந்தால் திமுகவை அழித்து விட்டு போகட்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. விஜய் ஆர்எஸ்எஸ்க்காக கட்சி தொடங்கியுள்ளார். அவர்கள் திமுகவோடு பெரியார், அம்பேத்கர் கொள்கைகளையும் அழிக்க பார்க்கிறார்கள்.

பிரபாகரன் பெயரை சொல்லி ஏமாற்ற வேண்டாம்

பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற கணக்கு போட வேண்டாம். தமிழ் தேசியம் என்ற கடப்பாரையை கொண்டு திமுக கோட்டையை இடிக்க நினைத்தால் பிரச்சனையில்லை. ஆனால் பார்ப்பனியம் என்ற கடப்பாரையை கொண்டு திமுக கோட்டையை, திராவிட கோட்டையை இடிக்க நாங்கள் விட்டுவிடுவோமா? நாங்களும் திமுகவை விமர்சித்து உள்ளோம். ஆனால் இங்கே பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தலைதூக்க முயற்சிக்கும்போது நாங்கள் திமுகவுடன் இணைந்து தான் உங்களை வீழ்த்த முடியும்.

திமுகவுடன் கைகோர்த்தது ஏன்?

எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் பேசும் அரசியலை திமுகவும் பேசுகிறது. அதில் அவர்கள் உறுதியாக இருப்பதால் நாங்கள் அவர்களோடு கைகோர்த்துள்ளோம். எங்களுக்கு இரண்டு சீட்டா, நான்கு சீட்டா என்பது முக்கியம் இல்லை. பிறர் என்னை நினைப்பார்கள். நமக்கு ஓட்டு வருமா? வராதா? இல்லை இப்படி பேசினால் திமுக கூட்டணியில் வச்சியிருக்குமா? என்பது குறித்து எனக்கு கவலையில்லை. நாளையே திருமாவளவனை கூட வைத்திருப்பது நமக்கு பிரச்சனை என திமுக நினைத்தாலும் கவலையில்லை'' என்று தெரிவித்தார்.