விழுப்புரம்

கச்சிராயப்பாளையம் அருகே ஒரே நாளில் மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் ஓட்டு வீட்டுக்குள் புகுந்தபோது அங்கு பணம் இல்லாததால் மண்வெட்டி, கோடரி, கடப்பாரையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே க.அலம்பலம் கிராமத்தில் உள்ளது முத்து மாரியம்மன் கோவில்.

இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூசை நடைபெற்ற பின்னர் கோவில் கதவைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள் காலை கோவில் நடைத் திறப்பதற்காக பூசாரி வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி இதுகுறித்து ஊர் முக்கிய பிரமுகர்களிடம் தகவல் கொடுத்தார். அதன்பேரில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கோவிலில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் உள்ளேச் சென்று பார்த்தபோது, முத்து மாரியம்மன் கழுத்தில் அணிந்திருந்த நான்கு கிராம் தங்கச் சங்கிலி மற்றும் கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை.

பின்னர் வெளியே வந்து பார்த்தபோது, கோவிலின் அருகில் உண்டியல் கிடந்தது. ஆனால் அதில் பணம் இல்லை.

மேலும் அதே கிராமத்தில் உள்ள முருகன், கெங்கையம்மன் ஆகிய கோவில்களின் கதவு பூட்டுகளும் உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி தகவலறிந்த கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், “ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில், முத்துமாரியம்மன், முருகன், கெங்கையம்மன் ஆகிய கோவில்களின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, முத்துமாரியம்மன் கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்கச்சங்கிலி மற்றும் உண்டியலில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம், முருகன், கெங்கையம்மன் கோவில்களின் உண்டியலில் இருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அதே பகுதியை சேர்ந்த வரிசு என்பவருக்கு சொந்தமாக காட்டுகொட்டாயில் உள்ள ஓட்டு வீட்டுக்குள் உள்ளே புகுந்த மர்மநபர்கள், பணம் இல்லாததால் அங்கிருந்த மண்வெட்டி, கோடரி, கடப்பாரை உள்ளிட்ட இரும்பு பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதே போல், கடந்த 28–ஆம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் கதவை உடைத்து உண்டியல் இருந்த ரூ.5 ஆயிரத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்குமாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கோவில்களில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.