அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து அமைச்சர் செல்லூர் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், தெர்மக்கோலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், பரவை பேருராட்சி பகுதியில் கழிவுநீர் செல்ல வசதி இல்லாததையடுத்து, தொற்று நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான செல்லூர் ராஜுவிடம் புகார் அளித்திருந்தனர். 

ஆனாலும், தங்களின் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு, அண்ணாநகர் பகுதியில், தனியார் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக கழிவுநீர் சாக்கடையை பள்ளத்தில் இருந்து மேட்டுப் பகுதிக்கு திருப்பி விடுவதாகவும், இதனால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பரவை பேரூராட்சி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர கோரினர். மேலும், தங்கள் கைகளில் தெர்மாகோல் ஏந்தியும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதி மக்கள் என்பதை அடையாளப்படுத்தவே தெர்மகோலுடன் வந்துள்ளோம். சீனா பத்திரிகை வரை பிரபலமான எங்கள் அமைச்ச்ர, வைகை அணையை தூர்வாராமல் அதற்கு பாதுகாப்பு கொடுப்பதுபோல் செல்லோடேப் மூலம் தெர்மகோல்களை ஒட்டி மிகச் சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்தார்.

எங்கள் தொகுதிக்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்தவர். இப்படிப்பட்ட வில்லேஜ் விஞ்ஞானியின் தொகுதி மக்கள் என்பதில் பெருமை கொண்டு காலரைத் தூக்கி விடுகிறோம். அப்பேற்பட்ட அமைச்சரின் பொதுமக்கள் நாங்கள் கஷ்டப்படலாமா? எனவே எங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் செய்து தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் கூறினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரும்படி கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விட்டுச் சென்றனர்.