தென்னிந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, சராசரிக்கும் குறைவாகவே  பெய்யும் என்று ஸ்கைமெட் தனியார் வானிலை அறிவிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் ஒரு சேர பொய்த்துப் போனதால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறதுங

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் இல்லாமல் போனது. கர்நாடகாவில் இருந்தது தண்ணீர் திறந்து விடுவார்கள் என எதிர்பார்த்து நாற்று  நட்ட  ஏராளமான டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாந்து போய் பயிர்கள் கருகியதால் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்

இந்நிலையில் நடப்பு ஆண்டில் தென் மாநிலங்களில் 89 செ.மீ,., க்கும் குறைவான அளவே மழை பெய்யும் என வானைலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது

தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில் இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்யும் என அறிவிப்பப்பட்டுள்ளது.

அதே நேரத்தில்  மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், பலத்த  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கை வாழ வைக்கும் இந்த மழை தென் மாநிலங்களுக்கும் சற்று கருணை காட்ட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு