There is no benefit from the reduced fee now

தற்போது குறைக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம் எந்தவொரு பயனும் தரப்போவதில்லை என்றும், பெரும் சுமையில் ஒரு துளிதான் குறைத்துள்ளது என்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம், பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 20 ஆம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 50% முதல் 100% பேருந்து கட்டணம் உயர்த்தியது. 

பேருந்து கட்டண உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டண உயர்வை அடுத்து, பொதுமக்கள், ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பேருந்து கட்டணத்ததை ஏற்றியபோதும் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. இந்த கட்டணம், ஒரு ரூபாய் என்ற அளவிலேயே குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 5 ரூபாய் என்பதில் இருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது குறைக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம், எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை என்றும், பெரும் சுமையில் ஒரு துளிதான் அரசு குறைத்துள்ளது என்றும் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்தையும், அரசியல் கட்சிகளின் போராட்டத்தை சமாளிக்கும் வகையில் பேருந்து கட்டணத்தை அரசு குறைத்து அறிவித்திருந்தாலும், போராட்டம் தீவிரமடையுமா? பிசுபிசுத்து போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.