தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு...? தமிழக சட்ட சபையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா.?
தமிழக சட்டப்பேரவையில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை-இரண்டாம் நாள் கூட்டம்
தமிழக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையைய நாளை வரை (11.10.2023) நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் 5 மசோதா தாக்கல்
அதனை தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முத்துசாமி, கீதா ஜீவன், இராஜகண்ணப்பன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், கயல்விழி உள்ளிட்டோர் பதிலளிக்கவுள்ளனர். கேள்வி நேரத்திற்கு பிறகு இன்று 5 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்றே நிறைவேற்றப்படவுள்ளது. அதனை தொடர்ந்து 2023-24 ஆண்டு கூடுதல் செலவீனங்களுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கட்சிக்கு ஒருவர் என்ற வீதத்தில் பேசவுள்ளனர்.
சாதி வாரிய கணக்கெடுப்பு.?
மேலும் நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகள் விடுவிப்பது, சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் சூழலில், இன்று அதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
காவிரி பிரச்சினையில், நாளொரு நாடகம்.. வீடியோ ஆதாரத்துடன் திமுக முகத்திரையை கிழிக்கும் அண்ணாமலை..!